Shadow

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம்.

தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி நாச்சியப்பா கெளடாவிற்குச் சந்திரா மீது சந்தேகம் வருகிறது. மனித உடலுறுப்புகளை விற்கும் அமைப்பினர், சந்திராவையும் சன்னியையும் துரத்துகின்றனர். அதிலிருந்து இருவரும் எப்படித் தப்பினார்கள் என்பதே படத்தின் முடிவு.

இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கெளடாவாக சாண்டி மாஸ்டர் மிரட்டியுள்ளார். அவரது கண்களும், அதில் தெறிக்கும் வில்லத்தனமும், விறைப்பான உடற்மொழியும் படத்தில் சூப்பர் வில்லன் இல்லாத குறையைப் போக்குகிறது. ஒரு கட்டத்தில் அவர் சூப்பர் வில்லனாகவும் மாறி விடுகிறார். க்ளைமேக்ஸில் அவரை வீழ்த்துவதே சந்திராவின் முன்னிருக்கும் பெரும்சவாலாக மாறுகிறது.

படத்தின் ஃப்ளாஷ-பேக்கில், கள்ளியங்காட்டு நீலியின் தொன்மக் கதையை அழகாகச் சேர்த்துள்ளனர். சிறு வயது நீலியாக நடித்துள்ள துர்கா C. விநோத் அற்புதமாக நடித்துள்ளார். அதி கதாநாயகியாகப் படம் முழுவதுமே வந்தாலும் கூட கல்யாணி பிரியதர்ஷினிக்குக் கிடைக்காத பிம்ப மாற்றம் (Transformation) அச்சிறுமிக்கு வாய்த்துள்ளது.

சந்திராவின் பக்கத்து வீட்டுப் பையன் சன்னியாக நஸ்லென் நடித்துள்ளார். இருளில் வாழும் சந்திரா சந்திக்கும் ஒரு வெள்ச்சமாகப் பிரகாசிக்கிறார் நஸ்லென். அவரது முகத்தில் இயல்பாகவே உள்ள வெகுளித்தனமும் குறுகுறுப்பும் இப்படத்திலும் வசீகரிக்கிறது. சந்திராவைப் பற்றிய உண்மை தெரிந்த பின் அவர் கேட்கும் கேள்விகள் படத்தின் கலகலப்பிற்கு உதவுகின்றன. நஸ்லெனின் நண்பர்கள் வேணு மற்றும் நைஜிலாக நடித்துள்ள சந்து சலீம்குமாரும், அருண் குரியனும் படத்தின் கலகலப்பிற்குப் பக்கதுணையாக உள்ளனர். சந்திராவாகப் பாந்தமாகவும் சாந்தமாகவும் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், இப்படத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவில் ‘லோகா’ ஓர் இருண்மையில் அட்டகாசமாக மிளிர்கிறது.

கேரளத் தொன்மவியலை நீலியோடு நிறுத்திக் கொள்ளாமல், சாத்தன், ஒடியன் என அட்டகாசமான பாத்திரங்களைக் களமிறக்கியுள்ளனர். சாத்தனாக டொவினோ தாமஸும், ஒடியனாகத் தயாரிப்பாளர் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அசத்தலாக ஏற்படுத்தியுள்ளனர். படம் முடிந்த பிறகு இரண்டு காட்சிகள் உள்ளன. காத்திருந்து தவறவிடாமல் பார்க்கவும்.