

“தாலி முக்கியமில்லையா?”
“இல்ல. அதுக்குப் பின்னாடி இருக்கிற பொண்ணோட மனசுதான் முக்கியம்.”
Z தலைமுறையினருக்கான ஒரு கொண்டாட்டமான படத்தில், புனிதமென சினிமா அடைகாத்து வந்த தாலி சென்ட்டிமென்ட்டைச் சுக்குநூறாக அறுத்தெறிந்து விட்டுள்ளார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படத்தின் முதல் காட்சியே, நாயகன் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்குப் சென்று கோபாவேசத்தில் யதேச்சையாக அவளது தாலியை அறுத்துவிடுகிறான். அவனை அடி வெளுத்து விடுகின்றனர். படம் இப்படி நகைச்சுவையாகத் தொடங்கினாலும், படம் மிக அழுத்தமாகத் தமிழ் சினிமா வியந்தோதி வந்த தாலி சென்ட்டிமென்ட்டை அடி வெளுத்துள்ளது. அந்த 7 நாட்கள் அம்பிகா, சின்ன தம்பி குஷ்பு, புதுப்பேட்டை சோனியா அகர்வால் என இந்த தாலி பல பெண்களைக் காவு வாங்கியுள்ளது. நாயகன் அணிவிக்கும் ஐடி கார்டைப் தாலியாகப் பாவித்துக் கண்ணில் ஒத்திக் கொள்ளும் முன்னாள் காதலி, கல்யாணத்திற்குப் பின் தாலிக்கு ஒரு ஐடி கார்டு அளவுக்கே முக்கியத்துவம் தருகிறார். வேலியை உடைத்தவன் இல்லை, வேலியே போட முடியாத உயரத்திற்குச் சென்றவன் தனது நாயகனென பைசனில் மாரி செல்வராஜ் சொல்வதைத்தான் டியூட்டும் செய்கிறான். தீபாவளிக்கு வந்துள்ள தரமான சமூக நீதிப்படமாக பிரதீப் ரங்கநாதனின் படத்தைச் சொல்லலாம்.
காதல் ஒருமுறை தான் பூக்கும், ஒருமுறை தான் பூக்கவேண்டும் என தற்கால தமிழ்ச் சமூகத்தை நம்ப வைத்ததில் விக்ரமனின் ‘பூவே உனக்காக (1996)’ படம் பெரும்பங்கு வகிக்கிறது. அதை உண்மையென நம்பி நிராகரிப்பையோ, பிரிவையோ பொறுத்துக் கொள்ள முடியாமல், வாழ்வைச் சீரழித்துக் கொண்ட பலரில் ஒருவர் தான் ’96 படத்து விஜய் சேதுபதியும். பூவே உனக்காக விஜய் போலவே காதலிக்கு அவள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துத் தர எதுவும் செய்யத் தயாராக இருக்கும் நபராக இருந்தாலும், டியூட் படத்து நாயகன் அறிவாளி, யதார்த்தம் உணர்ந்தவனாக இருக்கிறான். கூடவே சமூக நீதியிலும் நம்பிக்கை கொண்டவனாக இருப்பது சிறப்பு. ‘ஒரு பெண் NO சொன்னால், காதலை ஏற்காமலே சொன்னாலும் சரி, ஏற்றுப் பின் காதலிக்கும்பொழுது சொன்னாலும் சரி, அதை மதித்து அடுத்த நபரைத் தேடும் கட்சித்தாவல் காதலில் தர்மமாகும்’ என கமல் பகடியாகப் பாடியதையே, இப்படம் சீரியஸாகவும் நகைச்சுவையாகவும் சொல்கிறது.
படம் அதோடு நிற்கவில்லை. “அடேய்! மானம் போகுதுன்னா தற்கொலை பண்ணிக்குங்கடா. அதுக்கு ஏன்டா கொலை பண்றீங்க?” என கருணைக் கொலை புரிபவர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பியுள்ளது. அதையும் ஜாலியாகப் போகிற போக்கில், டியூடே சொல்வது போல், லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளது படம்.
வாயால் கவரைப் பிய்த்து, நாய்களுக்கு பிஸ்கட் போடும் பழக்கம் உடையவராகக் காட்டப்படுகிறார் நாயகன். அவரை ஒருநாள் நாய்கள் கூட்டம் இரவில் சுற்றி வளைத்துத் துரத்துகிறது. நாய்க்கு லிப் கிஸ் அடிக்கும் dog lover-ஆன நாயகனுக்கே இந்தக் கதி என்றால் என பெரும்பாலான மக்களின் பயத்தை மறைமுகமாக இயக்குநர் பிரதிபலித்திருந்தாலும், dog lovers-இன் கோபத்திற்கும் ஆளாகாமல் அந்தக் காட்சியைச் சாமர்த்தியமாக முடித்து அசத்தியுள்ளார்.
காதல் தோல்வியில் உள்ள அகனிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார் குறளரசி. ‘நீ என் ஃப்ரெண்டுடி’ என அக்காதலை மறுக்கும் அகனுக்கு, 6 மாதத்திற்குப் பின் குறளரசி மேல் காதல் வருகிறது. இடைப்பட்ட காலத்தில் குறளரசியோ பாரியை விரும்பிவிட, குறளரசியின் தந்தையும் பால்வளத்துறை அமைச்சரும், கருணைக் கொலை செய்யத் தயங்காதவருமான அதியமான் அழகப்பன், தன் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அகனுக்கும் – குறளரசிக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார். ஆனால் குறளரசிக்குப் பாரி மீதுதான் காதல். நாயகனான அகன், எப்படித் தன் மனைவிக்கு அவள் விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைத்துத் தருகிறான் என கலகலப்பாகப் பயணித்து முடிகிறது படம்.
டிராகன்-இல் இருந்த பளபளப்பு இல்லாமல், நாயகனுக்குரிய லட்சணம் இல்லாமல், நாய்களைக் கொஞ்சி பல இடங்களில் நாயைப் போலவே பாவனைகள் செய்பவராக நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். தான் என்ன செய்கிறோம் என்பதில் மிகக் கான்சியஸுடன் இருக்கிறார் பிரதீப். சிகரெட்டும், மதுவும் அதிகம் பயன்படுத்கிறார் என டிராகனில் வைக்கப்பட்ட விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு அதற்குப் பதிலளிக்கும் வகையில், சிகரெட்டிற்கு பதிலாக Dairy Milk சாக்லெட்டை ஸ்டைலாகத் தூக்கிப் போட்டு, கவரை வாயால் பிய்த்து ஸ்ட்ரெஸைப் போக்கிக் கொள்பவராக வருகிறார். இது இயக்குநரது கதாபாத்திர வடிவமாகவும் இருக்கலாம். ஆனாலும், வசனங்களில் காட்சிகளில் இப்படியான சின்னச் சின்ன பொறுப்புணர்வோடு மிகக் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது படம்.
அதியமான் அழகப்பனாக அசத்தியுள்ளார் சரத்குமார். ‘ட்ரியோ, ட்ரியோ’ என அவர் காட்டும் குதூகலமும், பார்வையிலேயே வெளிப்படுத்தும் வில்லத்தனமும், துள்ளலான நகைச்சுவையும் படத்திற்கு சுவாரசியம் சேர்த்துள்ளது. குறளரசியாக மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் அழகும் திறமையும் நிறைந்த மமிதா பைஜு. சோகம், மகிழ்ச்சி, பரிதவிப்பு, ஏக்கம், இறைஞ்சுதல், கோபம், அழுகை என மமிதாவின் முகத்தில் மாறிக் கொண்டே இருக்கின்றன பாவனைகள். பாரியாக நடித்துள்ள ஹிருது ஹாரூனும் கச்சிதமான தேர்வு. சாய் அபயங்கரின் பின்னணி இசையும், நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும், படத்தின் துள்ளலான கலப்பான mood-இற்கு ஏற்றவாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கான கொண்டாட்டத்திற்கு உத்திரவாதத்தை அளித்துள்ளான் டியூட்.

