Shadow

மை லார்ட் விமர்சனம் | My Lord review

எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறலைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது மை லார்ட் திரைப்படம். உயிரோடு இருப்பவரை இறந்தவராகச் சித்தரித்து, ஒருவரது அடையாளத்தையே அழிக்க அதிகாரத்தால் முடியும் எனப் படம் அச்சுறுத்துகிறது. ஆனால் அந்த அச்சுறுத்தலை உணர்வுப்பூர்வமாகக் கொண்டு செல்லாமல், கொஞ்சம் நகைச்சுவை கலந்து படம் தர வேண்டிய தாக்கத்தை நீர்த்துப் போகவும் செய்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.

அதிகாரம் சாமானியனை எங்குக் கொண்டு தள்ளுகிறது என்பதும், அதை வள்ளலாரியத்தில் ஊறிய ஓர் அப்பாவி எப்படி எதிர்கொள்கின்றார் என்பதும் தான் படத்தின் அரசியலும் மையச்சரடும். உயிருடன் இருக்கும்போதே நாயகன் முத்துச்சிற்பிக்கு இறப்புச் சான்றிதழைப் பெற்று, அவரை நையப்புடைக்கிறார் கவுன்சிலர் நர்சிம். குறு பிராந்திய அதிகார பலம் பொருந்திய கவுன்சிலரைத் தேசிய அளவில் உச்ச அதிகாரம் கொண்ட ஒருவரின் துணையோடு சிறைக்கு அனுப்புகிறார் நாயகன். அனுப்பியதோடு நில்லாமல், விதிகளை வளைக்கச் செய்து சிறைக்குச் சென்று, தன் மனைவியைச் சிரிக்க வைக்க, கைதிகளுக்கும் காவலர்களுக்கும் முன்பும் கவுன்சிலர் நர்சிமை அறைந்து கொண்டே இருக்கிறார் எளிமையே (!?) வடிவான நாயகன். கடன் வாங்கப்பட்ட கண நேர அதிகார போதையிலேயே, முத்துச்சிற்பியின் பவுசு பல்லிளித்து விடுகிறது. ஆனால், படத்தில் இது நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சி. எப்படி? அறையும்போது, ‘மன்னிச்சிடுங்கண்ணே!’ எனக் கேட்டுக் கொண்டே அடிக்கிறார் முத்துச்சிற்பி. ஷ்ஷ்ப்ப்ப்பாஆ..

தன்னை அலைக்கழித்து, அவமானப்படுத்தி அடித்தவனைச் செல்லமாக நாயகன் 5-6 முறை அறையக்கூடாதா? நிச்சயமாக அறையலாம். ஆனால், வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடும் முத்துச்சிற்பியாக நடித்துள்ளார் சசிகுமார். காட்சிகளின் சுவாரசியத்திற்காக, மையக் கதாபாத்திரத்தின் தன்மையையே இஷ்டமேனிக்கு அலைக்கழித்துள்ளார் ராஜு முருகன்.

மாடர்ன் லவ் சென்னை-இல், ராஜு முருகன் இயக்கிய ‘லாலாகுண்டா பொம்மைகள்’ குறும்படத்தில் போலி சாமியார்க்குப் பாவமன்னிப்பு கொடுத்தது போல், இப்படத்திலும் வலதுசாரி கருத்தாக்கத்தைப் (Ideology) பரப்புவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சுஜாதா மோகன் எனும் மத்திய அமைச்சருக்குப் பாவமன்னிப்பு வழங்கியுள்ளார் ராஜு முருகன். சர்வ வல்லமை படைத்த ஒன்றியத்துக்கு மன்னிப்பை*யும், பிராந்தியத்துக்குச் சிறையும் கன்னத்தில் அறையும் தந்துள்ளார் ராஜுமுருகன். ஆனால் இடதுசாரி அரசியல் பார்வையில் இருந்து தனது படைப்பு அணுகப்பட்டதாக ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி விடுவதில் சமர்த்தர் ராஜு முருகன். கட்சி சார்போ, கொள்கை பிடிப்போ இல்லாத ஜிப்ஸிக்குப் புரட்சிகர தெருப்பாடகன் என்ற அடையாளத்தைத் தந்திருக்கும் முரணே அதற்கு உதாரணம்.

எழுத்தாளர் அதிஷா கைவண்ணத்தில் உருவான DNA படத்தில், பிறந்த குழந்தை கடத்தப்படுவதைக் காட்டும் பொழுது, ஒரு பதைபதைப்பை உள்ளுக்குள் ஏற்படுத்தும். அதற்கு நிகரான பதைபதைப்பினை, ஒருவரின் அனுமதி இல்லாமலே கிட்னியைத் திருடும் நெட்வொர்க்கைப் பற்றிக் காட்டும்போது, இப்படமும் ஏற்படுத்துகிறது. பதைபதைப்பை ஏற்படுத்தும் அந்தப் புள்ளியைத் தொட்டுவிட்டு, படம் மெல்ல அதிலிருந்து நழுவி விடுகிறது. சிறுநீரகத்தைத் திருடுவதோடு நில்லாமல், பணத்தையும் அபகரித்து மக்களைச் சக்கையாய்ப் பிழிந்தெடுத்துக் கடாசும் நெட்வொர்க்கைக் காட்டிவிட்டு, அதிகாரத்தைக் கொண்டு சட்டத்திற்கு விரோதமாக சிறுநீரக தானம் பெறும் சுஜாதா மோகன் மீது கவனத்தைத் திசை திருப்புகிறார் இயக்குநர்.

(மன்னிப்பு* – Spoilers Ahead. சுஜாதா மோகனது வில்லத்தனத்தை வசனங்களில் இலைமறை காய்மறையாய் ஒளித்து வைத்துவிட்டு, அவர் உடலளவில் படும் வேதனையை விஷுவலாகக் காட்டி, அந்தப் பாத்திரத்தின் மீதொரு பரிதாபத்தை வரவைத்துவிடுகிறார் இயக்குநர். பிராந்திய நெட்வொர்க்கோ, எளியோரின் வறுமைக்குத் தூபமிட்டு, அவர்களை அதிகார மமதையுடன் ஏமாற்றிக் கசக்கி எறிகிறது. சுஜாதா மோகனது குழுவோ, முத்துச்சிற்பியையும் – சுசீலாவையும் மரியாதையுடன் நடத்தி, அவர்களது சம்மதத்துடன் சிறுநீரகம் பெறுவதாகக் காட்டுகிறார் இயக்குநர். இந்த விஷுவல் முரணால், படம் அழுத்தமாகப் பதிய நினைப்பதைச் செய்யத் தவறிவிடுகிறது. சட்டத்தை வளைக்கும் சுஜாதா மோகனுக்குச் சட்டரீதியான தண்டனையை அளிப்பதற்குப் பதில், அவர் திருந்திவிடுவதாக மன்னித்தருளி விடுகிறார் இயக்குநர். அதாவது படத்தின் கர்த்தாவான இயக்குநர் ராஜு முருகன், Judgement Day-வில் (climax), வலதுசாரிப் பேராபத்து எனச் சித்தரிக்கப்படும் ஒருவருக்கு அனுகூலமான தீர்ப்பை வழங்கி மனு தர்மத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்).

சுசீலாவாகச் சைத்ரா J. ஆச்சார் நடித்துள்ளார். எளிமையான பெண் என்ற வார்ப்பிற்குப் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால் சசிகுமாரோ அப்பாவித்தனமான எளிமை என்பது நந்தன் படத்தில் வரும் கூழ்ப்பானை கதாபாத்திரத்தின் எச்சம் என்பதாகப் பாவித்து அந்நியமாகிறார். முத்துச்சிற்பிக்கு ராஜு முருகன் எழுத்தும் உதவவில்லை, சசிகுமாரின் உடற்மொழியும் பொருந்திப் போகவிக்லை. ஆனால் மொழிப் பிரச்சனை இருந்தாலும், கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இன்றிப் பிரமாதப்படுத்தியுள்ளார் சைத்ரா.

வள்ளலாரை ஆதர்சமாகக் கொண்ட ஐயாவின் (நாயகியின் தந்தை) உடலில் கருப்பண்ணசாமி வருவார் என்ற வசனம் ஏமாற்றம் அளிக்கிறது.

நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய்

– அம்மை திருப்பதிகம் (வள்ளலார்)

சிறு தெய்வ வழிபாட்டாளர்களை மானிட பேய்கள் என்று சாடுகிறார் வள்ளலார். ஆனால் ராஜு முருகன் நகைச்சுவைக்காக, வள்ளலார் வழிபாட்டாளர் மீது கருப்பண்ணசாமியை ஏவி விட்டுள்ளார். எளிய மக்களின் நம்பிக்கைகளை, ஓர் அளவுகோல் கொண்டு இத்தகைய கேள்விகளுக்கு உட்படுத்தக் கூடாது தான். எனினும், இயக்குநர் ராஜு முருகன் பேச விழையும் அரசியலில் இருக்கும் முரணும், சுவாரசியத்திற்காக வளைக்கப்படும் கதாபாத்திரங்களும், ‘இதெல்லாம் டிராமா’ என எடுத்துக் கொள்ளும் தொடர் சலுகைகளும் எதார்த்தத்தைப் பரிகசித்து அயற்சியை அளிக்கிறது. மனிதத்தின் மீது நம்பிக்கையை வரவைக்கும் படத்தின் முடிவு மட்டுமே ஆசுவாசத்தை அளிக்கிறது.