தி ஹர்ட் லாக்கர்
ஒவ்வொரு வேலை உணவிற்கும் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆதி மனிதனிடம் போர்க் குணங்கள் நிரம்பி இருந்தது. தற்காப்பிற்காகவோ, உணவிற்காகவோ வேட்டையாடி பழக்கப்பட்ட மனிதனிடம் நாகரீகம் என்ற பெயரில் சாத்வீக குணங்கள் கொஞ்சம் தோன்றினாலும் மிருக குணங்கள் முற்றிலும் விடைப் பெறவில்லை. உள்ளிருக்கும் மிருகம் அடிக்கடி தனது பலத்தை சோதித்து பார்த்துக் கொள்ள துடித்த வண்ணம் உள்ளன. அந்த துடிப்பு தரும் போதை காரணமாக இராணுவத்தில் சிலர் ஆர்வத்தோடு சேர்கிறார்கள். அப்படி வந்தவர்களையும்.. எங்கிருந்தோ தாக்கும் நவீன ஆயுதங்களின் முன் தன் முழு வீரத்தையும் வெளிப்படுத்த முடியாத சோர்வும், மறைந்திருந்து தாக்குபவர்களால் ஏற்படும் எரிச்சலும், கண் முன் சக மனிதர்கள் சிதறும் கோரமும் தளர்வுற செய்யும். ஒரு வெடிகுண்டு அகற்றும் குழுவில் ஏற்படும் இத்தகைய தளர்வுறல்களை அழகாக சொல்லியிருக்கும் படம்'. வியட்னாம் போரில் வெடிகுண்...