
ஜெய் பீம் விமர்சனம்
'ஆர்ட்டிகிள் 15' போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன.
காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் எனும் குரூரமான உண்மையைத் தொட்டு படம் தொடங்குகிறது. அப்படி கைது செய்யப்படும் ராசாகண்ணு எனும் இருளர் இளைஞனைப் போலீஸ் அடித்து நையப்புடைக்கிறது. அவரது மனைவி செங்கேணி, வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். மனித உரிமை வழக்குகளுக்காகா ஆஜாராகும் வக்கீல் சந்துரு, காவல்...